தூய்மை பாரத இயக்கம் (கிராமம்)
தனிநபர் இல்லக் கழிவறை கட்டுதல்
மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும், கழிவறை கட்டி தூய்மையான இந்தியாவை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளை உருவாக்குதல்
- மாண்புமிகு தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் 110-விதியின் கீழ் 29.08.2016 அன்று முழு சுகாதார தமிழகம் – முன்னோடி தமிழகம் என்ற குறிக்கோளை அடைய அறிவிப்பு செய்துள்ளார்.
- முழு சுகாதார தமிழகம் – முன்னோடி தமிழகம் என்ற இலக்கினை அடைய மாநில அரசு பல்வேறு முன் முயற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற மாநிலமாக உருவாக்குவதற்கு அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து தனி நபர் இல்லக் கழிப்பறைகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக மாற்ற ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊரக வாழ்வாதாரத் திட்டம் இணைந்து பணியாற்றி வருகின்றன.
- ஊராட்சிகளில் கழிவறை பயன்பாடு பற்றிய மனமாற்றத்தை கொண்டு வர தூண்டுதல் பயிற்சிகள் ஊக்குனர்கள், மகளிர் குழுக்கள் மற்றும் தன்னார்வளார்கள் மூலம் தொடர்ந்து நடத்தப்பட்டது.
- மேற்கண்ட பயிற்சிகள் மூலம் மக்களிடையே கழிவறை பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி கழிவறைகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் கொண்டு வரப்படுகின்றன.
- மேற்கண்ட மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின் மூலம் திறந்தவெளி மலம் கழிக்கும் பழக்கம் அற்ற மாவட்டமாக மாற்ற மாவட்ட அளவில் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட ஒருங்கிணைப்பு குழு அமைக்க்ப்பட்டு, இக்குழுவில் பொது சுகாதாரம், கல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, சமூக நலத் துறை மற்றும் சத்துணவுத் துறை போன்ற அனைத்துத் துறைகளும் இணைந்து இவ்விலக்கினை அடைய செயல்பட்டது. திறந்த வெளியில் மலம் கழிக்கும் அற்ற ஊராட்சியாக மாற்ற, அனைத்து ஊராட்சிகளிலும் ஊக்குவிப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
- மேற்கண்ட வழிகாட்டுதலின் படி, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் / ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு ஆகிய உறுப்பினர்களை கொண்டு ஊரகப் பகுதிகளில் நேரிடை தகவல் தொடர்பு முறை கையாண்டு படிப்படியாக திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளில், திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளாக பிரகடனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 2018 பிப்ரவரி மாதம் திருவள்ளுர் மாவட்டத்தினை, திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற மாவட்டமாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேற்கூறிய வழிகாட்டு நெறிமுறைப்படி திருவள்ளூர் மாவட்டமானது 2018 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற மாவட்டமான நிலையை அடைந்துள்ளது
மொத்த ஊராட்சி ஒன்றியங்கள் | மொத்த கிராம ஊராட்சி ஒன்றியங்கள் | ODF அறிவிப்பு செய்யப்பட்ட கிராம ஊராட்சி ஒன்றியங்கள் | ODF அறிவிப்பு செய்யப்படாமலுள்ள் கிராம ஊராட்சி ஒன்றியங்கள் |
---|---|---|---|
14 | 526 | 526 | 0 |
சமுதாய சுகாதார வளாகம்
தனி நபர் இல்லக் கழிவறை கட்ட இடமில்லாத வீடுகளில் வசிக்கும் மக்கள் கழிவறை வசதி ஏற்படுத்த ரூ.2,00,000/= மதிப்பீட்டில் 85 சமுதாய சுகாதார வளாகம் ரூ.190.00 இலட்சத்தில் கட்டப்பட்டு பயன்படுத்தி வருகிறார்கள்.
ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் (IWSC)
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மகளிர், நகர்ப்புறங்களில் வசிக்கும் மகளிர் பெறும் சுகாதார வசதிகள் போன்ற வசதிகள் பெறும் பொருட்டு, அனைத்து ஊராட்சிகளிலும் ஒரு ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் கட்ட ஆணைப் பிறப்பித்து 2001 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும், ரூ.113.95 இலட்சம் மதிப்பீட்டில் சுமார் 750 சதுர அடி பரப்பளவில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டது. ஒவ்வொரு வளாகத்தில் 10 கழிவறைகள், 3 குளியலறைகள், 1 மின் மோட்டார் அறை, தண்ணீர் தொட்டி மற்றும் துணி துவைக்கத் தேவையான கல் மேடை ஆகியவற்றுடன் தேவையான தண்ணீர் வசதி, மின்சார வசதி மற்றும் மகளிர் வசதிக்காக வளாகங்களில் எரியூட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் போதிய பராமரிப்பு செய்யாததால் பெருமளவில் பழுதடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் இருந்தது. எனவே, பழுதடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்படுத்த கூடிய நிலையில் கொண்டு வருவதற்கானத் திட்டமே ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் சீரமைப்புத் திட்டம்.
இத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்து ஊராட்சிகளிலும், ஏற்கனவே அமைக்கப்பட்ட அனைத்து ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்களையும், மாவட்ட மற்றும் வட்டார அளவிலான குழு ஆய்வு மேற்கொண்டு, பழுதுகளை பட்டியலிட்டு, மதிப்பீடுகள் தயார் செய்து, பழுது நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
திருவள்ளுர் மாவட்டத்தில், ஊரக கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் (RBMRS) கீழ், 2011-2012 ஆம் ஆண்டில், 530 ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் பழுது முழுவதுமாக பழுது நீக்கம் செய்தல், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் கழிவறை அமைத்தல், குழந்தைகள் நேயக் கழிவறை அமைத்தல் மற்றும் மின்சாரம், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் முழு அளவில் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.
புனரமைக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகங்கள் முறையாக பயன்படுத்தவும், பராமரிக்கவும் ஒவ்வொரு வளாகத்திற்கும் பயன்படுத்துவோர் குழு ஒன்று அமைக்கப்பட்டு, மகளிர் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பயன்படுத்தும் குழுவிற்கு வழிகாட்டுப் புத்தகம் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த ஆண்கள் சுகாதார வளாகங்கள் (IMSC)
அரசு ஆணை (நிலை) எண்.99, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (மா.ஆ.தி.4) நாள் 22.10.2012ன் படி, கிராமப்புற சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளித்து மகளிருக்கான சுகாதார வளாகங்கள் அமைத்து மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் பேணுவதைப் போல ஆண்கள் மற்றும் இளம் சிறார்களுக்காகவும், சுகாதார வளாகம் அமைத்திட முடிவு செய்து, முதற் கட்டமாக 2012-2013 ஆம் ஆண்டில், திருவள்ளுர் மாவட்டத்தில், ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு இரண்டு வீதம், மொத்தம் உள்ள் 14 ஊராட்சி ஒன்றியங்களில், 28 ஆண்கள் சுகாதார வளாகங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக ஒரு ஆண்கள் சுகாதார வளாகம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு, மொத்தம் 29 ஆண்கள் சுகாதார வளாகங்கள் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டிலிருந்து வருகிறது. ஆண்கள் சுகாதார வளாகம் ஒன்றுக்கு ரு.4.00 இலட்சம் மதிப்பீட்டில் 570 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட உள்ளது. ஒவ்வொரு வளாகத்திலும், 6 இந்திய வகை கழிவறைகள், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த ஏதுவாக கைப்பிடிப் பொருத்தப்பட்ட ஒரு ஐரோப்பிய கழிவறை, இளம் சிறார்கள் பயன்படுத்தக் கூடிய கழிவறை (Baby friendly Toilet), குளிப்பதற்கான இடம், தண்ணீர் வசதியுடன் கூடிய தொட்டி மற்றும் கை கழுவும் தொட்டி மற்றும் துணி துவைக்கும் கல் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளது. வளாகத்தில் தண்ணீர் வசதிக்காக, ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு 3000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. வளாகத்தை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக சாய்வு நடை மேடை வசதி செய்யப்பட்டுள்ளது.
திட்டத்தினை செயல்படுத்துவதில் “பயன்படுத்துவோர் குழு” அமைத்தல் மிக முக்கியமான முதல் கட்டப்பணியாகும். ஏனெனில், இத்திட்டத்தின் வெற்றிக்கு அடிப்படியாக அமைவது பயன்படுத்துவோரிடையே ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வு மற்றும் சுகாதாரத்தின் தேவையை உணர்ந்திருத்தல் ஆகும்.
தினமும் சுத்தம் செய்து பராமரித்தல் தொடர்பான செலவினத்தை, பயன்படுத்துவோர் குழுக்கள் அமைத்து, பராமரிப்புக் குழுவிற்கு அருகிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு துவக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர கட்டணங்களை குறிப்பிட்ட காலத்திற்குள், தவறாமல் உபயோகிப்பாளர்களிடமிருந்து பயன்படுத்துவோர் குழுவின் ஊக்குவிப்பாளர் வசூலித்து அவற்றை உடனுக்குடன் வங்கியில் செலுத்தப்பட்டு வருகிறது. ஊரகப் பகுதியில், கழிவறை வசதியில்லாத குடும்பங்களை சார்ந்த மகளிர் மட்டும் மகளிர் சுகாதார வளாகங்களைப் பயன்படுத்தி, ஆண்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதினால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் பொருட்டு, ஆண்கள் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது.
மேலும், ஆண்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதினால், கொக்கிப்புழு பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.
பள்ளிக்கழிவறை பராமரிப்பு
ஊரகப் பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் மற்றும் அரசுப் பள்ளிகளில் உள்ள கழிவறைகள் மற்றும் வகுப்பறைகள் முறையாக சுத்தம் செய்து பராமரிப்பு மேற்கொள்ள, பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஊரக வளர்ச்தித் துறை இணைந்து பராமரிப்புப் பணி மேற்கொள்ள பள்ளிக்கல்வித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இணைந்து பராமரிப்புப் பணி மேற்கொள்ள (PLF/ Outsourcing) நிறுவனங்கள் மூலம் தற்காலிக துப்புறவுப் பணியாளர்கள் நியமனம் செய்து கழிவறை சுத்தம் செய்யத் தேவைப்படும் உபகரணங்கள் வழங்கி, அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள கழிவறைகள் முழு பயன்பாட்டில் இருக்கும் வகையில், பள்ளிக் கழிவறைப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அங்கன்வாடி கழிப்பறைகள்
இம்மாவட்டத்தில், கடந்த ஏழு ஆண்டுகளில், 1693 அங்கன்வாடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக, 973 அங்கன்வாடி கழிப்பறைகள், ஒரு கழிப்பறைக்கு, ரூ.8,000/= வீதம் ரூ.175.14 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக, ரூ.18,000/= தொகையில், மொத்தம் 720 கழிப்பறைகள் கட்டப்பட்டு அங்கன்வாடி குழந்தைகளின் பயன்பாட்டில் உள்ளது.
சுகாதார ஊக்குநர்கள்
526 ஊராட்சிகளிலும், மகளிர் குழுக்களில், ஈடுபாட்டுடன் பணிபுரியும் மகளிர் அடையாளம் காணப்பட்டு, மாவட்ட மற்றும் மாநில அளவில் சுகாதார தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு, ஒரு ஊராட்சிக்கு, ஒரு நபர் வீதம், தேர்வு செய்யப்பட்டு, சுகாதார ஊக்குநர்களாக ஒவ்வொரு ஊராட்சியிலும் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் கழிவறைகள் கட்டப்படுவதையும், கட்டிய கழிவறைகள் தொடர் பயன்பாட்டில் இருப்பதையும், உறுதி செய்து, ஊராட்சிகளின் சுகாதார நிலையை தக்க வைக்க களப்பணி செய்து வருகிறார்கள்.