மூடுக

ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில், திருவள்ளுர்

வழிகாட்டுதல்

ஆஞ்சநேயர் சுவாமி

இந்தியா முழுவதும், ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமி ஆஞ்சநேயர், ஹனுமான்ஜி, மாருதி, பஜ்ரங் பாலி, மஹாவீர், பவன் குமார் என பல பெயர்களால் வழிபடப்படுகிறார். அவர் வாயு தேவனுக்கும், அஞ்ஞனா தேவிக்கும் மகனாக அவதரித்தார். இவர் ஏழு சிரஞ்ஞீவி (இறவா நிலை) களில் ஒருவர். சூரியத் தேவனே இவரது ஆசான் ஆவார். வால்மீகி இராமாயணத்தில் சுந்தர காண்டம் என்ற தனி அத்தியாயத்தில், ஆஞ்சநேயர் அன்னை சீதாபிராட்டியை கடல் கடந்து தேடும் போது நிகழ்த்திய லீலைகளைப் பற்றி மிக விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

சுந்தர காண்டம் 2885 ஸ்லோகங்களைக் கொண்டுள்ளது. சமஸ்கிருத வார்த்தையான சுந்தர என்பதற்கு தமிழில் அழகான என்று பொருள். இராமாயணத்தில், சுந்தர காண்டத்தின் மகிமை மிகவும் முக்கியமானதாகும். கடலானது சம்சார சாகரத்தைக் பிரதிபலிக்கிறது. மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமர், பரமாத்மாவையும், பூமா தேவியின் அம்சமான சீதாபிராட்டியையும், ஜீவாத்மாவுடன் ஒப்பிட்டு கூறுகிறார். ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமியை குரு அல்லது தெய்வீக ஆசிரியராக குறிப்பிடுகிறார்.

பஞ்சமுக ஆஞ்சநேயரின் தோற்றம்

பஞ்சமுக ஆஞ்சநேயரின் தோற்றத்தைப் பற்றி இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு கிளைக் கதையிலிருந்து அறிந்து கொள்ளலாம். இராம – இராவண யுத்தத்தின் போது, பாதாளலோக அரசனான மஹிராவணாவின் உதவியை இராவணன் நாடினான். ஹனுமார், இராம இலட்சுமணர்களைப் பாதுகாக்க, தனது வாலையே ஒரு கோட்டையாக மாற்றி, அதில் பத்திரமாக அவர்களைப் பாதுகாத்தார். ஆனாலும், மஹிராவணாவோ, விபீஷணன் உருவம் எடுத்து வந்து, அவர்களை சிறைப் பிடித்து, பாதாளலோகம் கூட்டிச் சென்றான்.

அதை அறிந்த ஹனுமார், அவர்களை பத்திரமாக மீட்க, பாதாளலோகம் சென்றார். அங்கு சென்ற பிறகு தான், அவ்விடத்தில் எரிந்து கொண்டிருந்த ஐந்து விளக்குகளையும் ஒரு சேர அணைத்தால் தான், மஹிராவணாவின் உயிர் பிரியும் என்பதை அறிந்தார். உடனே, தன் முகத்துடன், ஸ்ரீநரசிம்ம சுவாமி, ஸ்ரீஹயக்ரீவ சுவாமி, ஸ்ரீலஷ்மி வராக சுவாமி மற்றும் ஸ்ரீமஹாவீர கருட சுவாமி ஆகியோர் முகங்களையும் கொண்ட பஞ்ச முக வடிவம் எடுத்து, அந்த ஐந்து விளக்குகளையும் ஒரு சேர அணைத்தார். இதனால், கொடியவன் மஹிராவணான் மாண்டான். பிறகு ஹனுமாரும், இராம இலட்சுமணர்களை பத்திரமாக மீட்டு வந்தார்.

மேலும், பஞ்சமுக ஆஞ்சநேயர், மந்த்ராலய மகானான ஸ்ரீராகவேந்த்ர தீர்த்தரின் உபாசனை தெய்வமாகத் திகழ்கிறார். அவர், பஞ்சமுக ஆஞ்சநேயரை நினைத்து தியானம் செய்த இடம் பஞ்சமுகி என்றழைக்கப்படுகிறது. அங்கு, பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது.

கும்பகோணத்திலும், பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையே, மாதிரி வடிவமாக எடுத்து கொள்ளப்பட்டு, இந்த தலத்தில், மிகப் பிரம்மாண்டமாக 32 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை மகாபிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் (சென்னையிலிருந்து 45 கி.மீ தொலைவு) அருகிலுள்ள பெரியகுப்பம் கிராமத்தில் மிகப் பிரம்மாண்டமான 32 அடி உயரமுள்ள, ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி சிலையானது, பதிவு செய்யப்பட்ட ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி அறக்கட்டளையின் நிறுவனர், குருதேவ் பூஜ்யஸ்ரீ மந்த்ரமூர்த்தி தாசன் S. வெங்கடேச பட்டாச்சாரியார் சுவாமிகளால், 2004 –ம் வருடம் ஜூலைத் திங்கள் 6 –ம் நாள் மகாபிரதிஷ்டை, செய்யப்பட்டது.

இந்த நிகழ்வானது, ஒட்டு மொத்த மனித குலத்தின் நன்மையை கருதி மேற்கொள்ளப்பட்டுள்ளதால்,  மிகவும் தனித்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. உலகத்திலேயே, இங்கு மட்டும் தான் மந்த்ர சாஸ்த்ரப்படி மகாபிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால், இத்தலம் தனித்தன்மை வாய்ந்ததாகத் திகழ்கிறது.

குருதேவ் தனது குருவின் மூலம், தனக்கு கிடைத்த, சக்தி வாய்ந்த பஞ்ச முகங்களான, ஸ்ரீஆஞ்சநேய சுவாமி, ஸ்ரீநரசிம்ம சுவாமி, ஸ்ரீமஹாவீர கருட சுவாமி, ஸ்ரீலஷ்மி வராக சுவாமி மற்றும் ஸ்ரீஹயக்ரீவ சுவாமி ஆகியோரின் மூல மந்த்ரங்களின் பலனானது, ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் சென்றடைய வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வு காரணமாகவே, இங்கு ஸ்ரீ விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமியை பிரதிஷ்டை செய்துள்ளார்.

மந்த்ர சாஸ்த்ரத்தில் வல்லவரான குருதேவ், தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் அடைந்த துயர்களை, சிறப்பு பரிகாரங்களைச் செய்து களைந்துள்ளார். அவர், காஞ்சி மகாபெரியவாளிடமிருந்து, மந்த்ரமூர்த்தி பட்டம் பெற்ற ஸ்ரீ ரெங்கசுவாமி பட்டாச்சாரியாரை தனது குருவாக அடைந்ததற்கு மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

மண்டபம் கட்டி முடித்த பிறகு, மூல மந்த்ரங்களை, பஞ்ச முகங்களுக்கு எதிரே, சுவற்றில் செதுக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பக்தர்கள் எவரும், இந்த மூல மந்த்ரங்களை உரிய முறையில் ஜெபித்து, அதற்கான பலனை எளிதில் அடையலாம். இது சாத்தியமாவதற்கு, குரு பரம்பரை மகா சக்தியானது அவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.

பஞ்சமுகங்களின் முக்கியத்துவம்

  • கிழக்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமி முகமானது, நமது பாவத்தின் கறைகளைப் போக்குவதுடன், மனதையும் தூய்மைப் படுத்துகிறது.
  • தெற்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீநரசிம்மர் சுவாமி முகமானது, நமக்குள் இருக்கும் எதிரிகள் பற்றிய பயத்தைப் போக்குவதுடன், நம்மை வெற்றி பெறவும் வைக்கிறது.
  • மேற்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீமஹாவீர கருட சுவாமி முகமானது, தீய சக்திகள் மற்றும் காத்து கருப்பினால் ஏற்படும் தீய விளைவுகளைப் உடனடியாகப் போக்குவதுடன், கொடிய விஷக்கடியினால் நமது உடலில் சேரும் விஷத்தையும் முறிக்கிறது.
  • வடக்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீலஷ்மி வராக சுவாமி முகமானது, நமக்கு கிரகங்களின் பெயர்ச்சியால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பதுடன், அனைத்து விதமான அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அளிக்கிறது.
  • மேல் நோக்கியுள்ள ஸ்ரீஹயக்ரீவ சுவாமி முகமானது, நமக்கு ஞானத்தினையும், நாம் ஈடுபடும் அனைத்து காரியங்களிலும் வெற்றியினையும், புத்ர பாக்கியம் அளிக்கிறது

மகாபிரதிஷ்டையின் சிறப்பம்சங்கள்

  • மிகப் பிரம்மாண்டமாக 32 அடி உயர விஸ்வரூப வடிவிலுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி சிலையானது, ஒரே கல்லில் (பச்சை நிற கிரானைட் நிறம் மற்றும் 36’ X 20’ X 10’ அளவு) கர்நாடக மாநிலத்திலுள்ள ஹசன் என்ற இடத்தில் செதுக்கப்பட்டு அங்கிருந்து சாலை வழியாக திருவள்ளூருக்கு கொண்டு வரப்பட்டது.
  • ஒட்டு மொத்த உலகத்திலேயே மந்த்ர சாஸ்த்ரப்படி மகாபிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரே தலம்
  • மகாபிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இடமானது புராண காலங்களில் ருத்ர வனம் என அழைக்கப்பட்டு வந்துள்ளது. மேலும், அகத்தியர் முதலான மாமுனிவர்கள் தவம் செய்த இடமாகவும் அறியப்படுகிறது.

அறக்கட்டளையின் முக்கிய பணிகள்

  • அன்னதானம்
  • வேத பாடசாலை அமைத்தல்/ பராமரித்தல்
  • மந்த்ர, யந்த்ர மற்றும் தந்த்ர சாஸ்த்ரங்களை பரவலாக்கல்
  • தேவைப் படும் ஏழை எளியோர்க்கு கல்வி பயில உதவி செய்தல் மற்றும் உரிய மருத்துவ வசதி செய்து கொடுத்தல்
  • கோசாலை அமைத்தல்/ பராமரித்தல்
  • முதியோர்  மற்றும் அனாதை இல்லங்கள் அமைத்தல்/ பராமரித்தல்

ஆலய அமைவிடம்

திருவள்ளூர் நகரமானது சென்னையிலிருந்து 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மிகவும் புகழ் பெற்ற வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் இங்கு அமைந்துள்ளது. சென்னை சென்ட்ரல் இரயில் நிறுத்தத்திலிருந்து திருவள்ளூர் நகரை அடைவதற்கு புறநகர் மின்சார ரயில் சேவை உள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் சென்னை பன்னாட்டு விமான நிலையமாகும். ஆயில் மில் நிறுத்தத்திலிருந்து பக்தர்கள் ஆசிரமத்தை எளிதாக அடைவதற்கு ஆங்காங்கு அடையாள பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

ஆலய முகவரி

10, தேவி  மீனாட்சி நகர், இராஜாஜிபுரம் பகுதி – III, பெரிய குப்பம், திருவள்ளூர் – 602 001. தமிழ் நாடு
தொலைபேசி : +9144-27600641.

மேலும் விவரங்களுக்கு கோவில் இணையதளத்தைப் பார்க்கவும்

புகைப்படத் தொகுப்பு

  • ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி
  • ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி
  • பஞ்சமுக அஞ்சனேயஸ்வாமி

அடைவது எப்படி:

வான் வழியாக

சென்னை விமான நிலையம்

தொடர்வண்டி வழியாக

அருகில் உள்ள ரயில் நிலையம் புட்லூர் மற்றும் திருவள்ளூர். மேலும் அடிக்கடி புற நகர் ரயில் சேவை உள்ளது,

சாலை வழியாக

இந்த இடம் ஆவடி மற்றும் திருவள்ளூர் பேரூந்து மார்க்கத்தில் அமைந்துள்ளது. மேலும் அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. பேரூந்து நிறுத்தம் : காக்களூர்