மூடுக

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி

வழிகாட்டுதல்
வகை மதம் சார்ந்த

தலவரலாறு குறிப்புகள்

திருத்தணியிலுள்ள அழகான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடல்மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் மலைக்குன்றுகளின் மேல் ஒரு கிரீடம் போலவும் இரு புறங்களும் வியக்கத்தகு பரந்த காட்சியைக் கொண்ட மலைகளின் மத்தியில் இது அமைந்துள்ளது. இத்தலம் சென்னையிலிருந்து மும்பாய் (பம்பாய்) செல்லும் இருப்புப்பாதை வழியில் அரக்கோணத்திற்க்கு வடக்கே 13 கி.மீ. தொலைவிலும் சென்னையிலிருந்து மேற்கே திருவள்ளூர் வழியாக 87 கி.மீ. தொலைவிலும், காஞ்சிபுரத்திலிருந்து வடக்கே 37 கி.மீ. தொலைவிலும், திருப்பதியிலிருந்து தெற்கே 66 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு எல்லா வழித்தடங்களிலும் பேருந்து மற்றும் இரயில் போக்குவரத்து வசதி உள்ளது.

திருத்தணிகையின் பெருமை – புராண முக்கியத்துவம்

குன்றுதோராடும் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக முருகப் பெருமானின் கிரீடத்தில் ஜொலிக்கும் வைரக்கல்லாக இத்திருத்தலம் பிரகசமாக உள்ளது. முருகக் கடவுளின் பெயர் தணிகாச்சலம் எனவும் கூறப்படுகிறது. முருகப் பெருமான் தேவர்களின் துயரம் நீங்கும் பொருட்டு சூரபத்மனுடன் செய்த பெரும் போரும் வள்ளிய்ம்மையை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுகோபமும் தணிந்து அமர்ந்த தலம் ஆதலின் இதற்குத் தணிகை எனப் பெயரமைந்தது. தேவர்களின் அச்சம் தணிந்த இடம், முனிவர்களின் காம வெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம், அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றைத் தணிக்கும் இடமாதலாலும் இதற்குத் தணிகை என் பெயரமைந்தது.

முருகப் பெருமான் தன் கிரியா சக்தியாகிய தெய்வானையைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொண்டாற்போல் திருத்தணிகையில் தன் இச்சா சக்தியாக வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ந்து இனிது வீற்றிருந்தருள்கிறார். மேலும், இக்கடவுளை ஐந்து குறிப்பிட்ட தினங்களில் தொடர்ந்து வழிபடும் பக்தர்கள் கடவுளின் ஆசியை பெற்றும் அவரது வாழ்கையில் அரிய பேறுகளை பெற்றவர்கள் ஆகிறார்கள்.

திரேதா யுகத்தில் ராவணனை போரில் வென்று அதனால் ஏற்பட்ட பாவத்திற்கு பரிகார பூஜைகள் செய்ய ராமேஸ்வரம் சென்று திரும்பும் வழியில், சிவபெருமான் கேட்டுக் கொண்டதற்கிணங்க,  திருத்தணிகையில் முருகப் பெருமானை வழிபட்டு மனச் சாந்தி பெற்றதாக புராணங்கள் கூறுகின்றது. துவாபர யுகத்தில் அர்ஜுனன் தென் பகுதிக்கான தீர்த்த யாத்திரை செல்லும் வழியில் இந்திருக்கோயில் சுவாமியை தரிசித்து ஆசி பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

திருத்தணிகையில் முருகனை வழிபட்டு தாரகாசூரனால் கவரப்பட்ட தமது சக்கரம் மற்றும் சங்கு முதலியவற்றைத் திருமால் மீண்டும் பெற்றார். அவர் உண்டாக்கிய விஷ்ணு தீர்த்தம், மலையின்மேல் கோயிலுக்கு மேற்கே உள்ளது.

திருத்தணிகையில் பிரம்மதேவர் முருகப் பெருமானைப் பூஜித்துப் படைப்புத் தொழில் செய்யும் ஆற்றலை திரும்பப் பெற்றார்.  மேலும்,  சூரபத்மனால் கவரப்பட்ட தமது செல்வங்களையும் முருகன் அருளால் திரும்பப்பெற்றார். கலைமகளும் இந்தலத்தில் முருகனைப் பூஜித்தாள். கிழக்கே மலையடிவாரத்திலிருந்து மலைமேல் ஏறிச் செல்லும் வழியில், பாதித் தொலைவில் மலைபடிகளை அடுத்த வடபக்கத்தில் பிரம்மதேவர் உண்டாக்கிய பிரம்ம தீர்த்தம் இருக்கிறது. இது பிரம்மசுனை என அழைக்கப்படுகிறது. இதன் தென்கரையில் பிரம்மேசுவரர் கோயில் அமைந்துள்ளது.

சூரபத்மனால் தேவலோகத்திலிருந்து கவர்ந்து கொண்டு செல்லப்பெற்ற, சங்கநிதி, பதுமநிதி, காமதேனு, சிந்தாமணி, கற்பகதரு முதலிய செல்வங்களை மீண்டும் பெறுவதற்காக இந்திரன் முருகனை இங்கு பூஜித்தான். திருத்தணிகை மலைக்குத் தென்புறத்தில் உள்ள ஒரு சுனையில்,  நீலோற்பல மலர்க்கொடியை நட்டு வளர்த்து அதன் பூக்களைக் கொண்டு காலை, மாலை, நண்பகல் என்று மூன்று வேளைகளிலும் இந்திரன் முருகனை பூஜித்தான். அதுபோல் அவன் ஸ்தாபித்து,  வணங்கி அருள் பெற்ற விநாயகருக்குச் செங்கழுநீர் விநாயகர் என்று பெயர். அவனால் உண்டாக்கப் பெற்ற நீலோற்பல மலர்ச்சுனை இந்திர நீலச்சுனை என்னும் பெயர் பெற்ற தீர்த்தமாக மலைக்கோயிலின் தெற்கு வாயிலுக்கு நேராக இருக்கின்றது. இது கல்கார தீர்த்தம் என்வும் அழைக்கப்படுகின்றது. இத்தீர்த்தகத்தின் நீர்தான் சுவாமியின் திருமுழுக்கிற்கும், திருமடைப்பள்ளிக்கும் மற்றும்  பூஜை செய்வதற்கும் தனிச்சிறப்பாகப் பயன் படுத்தப்படுகிறது. அதனால் இத்தீர்த்தத்தைத் தொலைவிலிருந்து தொழுதல் வேண்டுமேயன்றி வேறு எவ்வகையிலும் நாம் பயன்படுத்துதல் ஆகாது.

பதி, பசு, பாசம் என்னும் இறை, உயிர், தளை ஆகிய முப்பொருள் இயல்புகளைக் கூறும் சைவ சித்தாந்த் நுட்பங்களை இங்கு முருகனை வழிபட்டுத் திருநந்தித் தேவர் அறிவுறுத்தப் பெற்றார். அவன் பொருட்டு முருகப் பெருமான் வரவழைத்த “சிவதத்துவ அமிர்தம்” என்னும் நதியே இப்பொழுது நந்தியாறு என் அழைக்கப்படுகிறது.முருகனின் அருளைப் பெற நந்தி தேவர் யாகம் புரிந்த குகை நந்தி குகை என அழைக்கப்படுகிறது.

தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்த போது மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்னும் நாகத்தினை நாணாகவும் கொண்டு கடைந்தனர். அங்ஙனம் கடைந்த போது வாசுகி நாகத்தின் உடலில் பல வடுக்களும், புண்களும், தழும்புகளும் ஏற்பட்டு பெரிதும் துயர் விளைவித்தன. ஒரு சுனையில் நாள்தோரும் முறையாக நீராடி முருகனை வழிபட்டு, வாசுகி நாகம் அத்துயரங்களினின்று நீங்கி உய்த்தது. ஆதிசேச தீர்த்தம் விஷ்ணு தீர்த்ததிற்க்கு மேற்கே மலைப் பாதைக்குத் தென்புறம் இருக்கிறது.இங்கு முருகனை வழிபட்டு, அகத்திய முனிவர் முத்தமிழ்ப் புலமையும், சிவஞானத் தெளிவும் பெற்றார். அவர் உண்டாக்கிய அகத்திய தீர்த்தம் ஆதிசேச தீர்த்தத்திற்குத் தென் கிழக்கில் உள்ளது.

இலக்கிய முக்கியத்துவம்

சற்றேற்குறைய அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிறந்த தவயோகியாகிய அருணகிரிநாதர் இத்திருத்தலத்தின் பெருமையை திருப்புகழ் எனும் நூலின் மூலம் பாடல்கள் அமைத்து பாராட்டியுள்ளார். இவர் தமது பாடல்களில் தணிகை மலையை கைலாய மலைக்கு ஒப்பிட்டும் புகழ்ந்துள்ளார். 150 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சிறந்த தவயோகியும் சித்தருமான இராமலிங்க வள்ளலார் சுவாமிகள், அருட்பிரகாச வள்ளலார் என அழைக்கப்பட்டவர். தமது திருவருட்பா நூலில் திருகோயிலின் முருகப் பெருமானைப் பற்றிப் பாடியிருப்பதும் திருத்தணிகை முருகனின் அருங்காட்சியினை சென்னையிலுள்ள தமது இல்லத்தில் கண்ணாடியில் கண்டு தரிசித்து அருள் பெற்றதையும் உணர முடிகிறது. மேலும், மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் தணிகை மலையில் தமக்கு சங்கீத ஞானம் வேண்டி முருகனை பூஜித்த போது முருகப் பெருமான் அவர் நாவில் அட்சர ஆசி அருளி அவருக்கு பாடும் திறனை வழங்கினார். அன்னாரும்,  முதல் பாட்டாக ”ஒம் குரு குஹாய நம” என்று முதல் அடி எடுத்து பாடலைத் தொடுத்தார். இவ்வாறு பல அதிசயங்கள் தணிகை மலையில் பற்பல அருளாலர்களுக்கு முருகப் பெருமானால் அருளப்பட்டுள்ளதால் மிகவும் தொன்மை வாய்ந்ததாகவும், பெருமை வாய்ந்ததாகவும் திருத்தணி தலம் விளங்குகிறது.

திருத்தனியின் சிறப்புகள்

சரவணப் பொய்கை

முருகப் பெருமான் சரவணப் பொய்கை தீர்த்தத்தில் கார்த்திகை பெண்களுக்கு குழந்தையாக அவதரித்த திருக்குளம். திருத்தணிகை சரவணப் பொய்கை தீர்த்தத்தில் நீராடுவோர் தங்களது உடல் உபாதைகள், பாவங்கள் கலையப்ப்டுவதக ஐதீகம். சரவணப் பொய்கையில் நீராடிய பின்பே படிக்கட்டுகள் வழியாக மலைக்கோயிலை சென்றடைகின்றனர். ஆடிக்கிருத்திகை திருவிழாவின் போது மலைக்கோயிலில் உற்சவர் அலங்காரத்துடன் பவனி வந்து தெப்பக் குளத்தில் தெப்பத்தில் சுற்றி வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

சப்தரிஷி தீர்த்தம்

சப்தரிஷிகள் என்று கூறப்படும் வசிஷ்டர் முதலான ஏழு முனிவர்கள் இங்கு முருகனைப் பூஜித்தனர். அவர்கள் பூஜித்த இடம் மலையின் தென்புறத்திசையில் உள்ளது. அவர்கள் அமைத்த ஏழு சுனைகளும் மற்றும் கன்னியர் கோயிலும் இங்கு உள்ளன. இந்த இடம் இப்போது ஏழு சுனை கன்னியர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. அடர்ந்த சோலைகளால் சூழப்பெற்ற பசுமைத்தன்மையும் நிறைந்த, வெயில் நுழையாமல் அமைதி மிகுந்த இடமாகத் திகழ்கின்ற இந்த இடம், தவத்திற்கும் தியானத்திற்கும் ஏற்ற இடமாக விளங்குகின்றது. திருத்தணி நகரின் வெளிப்புறத்தின் நந்தியாற்றங்கறையில் பழமை வாய்ந்த விஜயராகவ சுவாமி, ஆறுமுக சுவாமி மற்றும் வீரட்டீஸ்வரர் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. இவை ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. பழய காலம் தொட்டு நீண்ட வருடங்களாக ஆறுமுக சுவாமி கோயிலில் அமைந்துள்ள மூலவரின் பாதத்தில், மார்பில், சிரசில் தொடர்ந்து மூன்று நாட்கள் சூரிய ஒளி விழுந்து காணப்படுவது பக்தி பரவசமூட்டும் நிகழ்ச்சியாகும்.

விழாக்கள்

மாதாந்திர கிருத்திகை உற்சவ நாட்களில் ஆயிரக் கணக்கில் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை தருகின்றனர். இது அல்லாமல் பிரதிவருடம் டிசம்பர் 31, ஜனவரி 1 இல் திருப்புகழ் திருப்படி திருவிழா மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். ஆடிகிருத்திகை திருவிழாவில் தென்னிந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணகான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இத்திருவிழாவின் போது திருத்தணி நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பக்தர்கள் திரளாக திரண்டு வருகின்றனர். ஆடிக்கிருத்திகை திருவிழாவின் போது சுமார் ஒரு லட்சத்திற்கு மேலான பக்தர்கள் மலர் காவடிகள் எடுத்து முருகனை தரிசிக்க வருகின்றனர். இத்திருவிழாவின் போது இரவு பகல் முழுவதும் பக்தர்கள் போடும் அரோஹரா கோஷம் மற்றும் பக்தர்கள் வரிசையாக ஆடிப் பாடி செல்வது கண்கொள்ளாக் காட்சியாகும்.

திருப்புகழ் திருப்படி திருவிழா

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்த மாநில மக்கள் ஆங்கிலேய வழக்கத்தின்படி புத்தாண்டு கொண்டாடுவதற்கு பதிலாக தமிழ்க்கடவுளின் ஆசி பெற ஆங்கில புத்தாண்டிற்கு முன்தினம் தணிகை மலையில் குழுக்களாக கூடி பஜனைகள் பாடி முருகனை தரிசிக்க வருகின்றனர். தமிழநாட்டைச் சேர்ந்த வள்ளிமலை சுவாமிகள் தமது சீடர்களுடன் மேற்படி பஜனைக் குழுக்களை ஒன்றிணைத்துத் திருவிழாவாக கொண்டடினார். மேற்படி பாடல்கள் பாடி வரும் பஜனைகள் கூட்டம் தற்பொழுது நூற்றுக்கணக்கில் பெருகி டிசம்பர் 31 இல் இரவு வருடத்தின் நாட்களைக் குறிக்கும் விதத்தில் அமைந்துள்ள 365 படிகளுக்கும் பூஜை செய்து படி ஒன்றுக்கும் ஒவ்வொரு பாட்டினை இசைத்து பாடிச் சென்று மலைக்கோயிலைல் சுவாமி தரிசனம்செய்வது இன்றும் தொடர்ந்து வழக்கத்தில் இருந்து வருகிறது. அவ்வாறு பஜனை குழுவினர் பாடும் பாடல்கள் மேற்படி இரு நாட்களிலும் மலையில் எதிரொலித்து வருகிறது. மேலும் அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேல் காவடிகள் எடுத்து இறைவனை தரிசிக்க வருகின்றனர்.

திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள்

  • பக்தர்கள் மலைக்கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு வாகனங்கள் மூலம் எளிதில் சென்று வர மலைப்பாதையில் தார்ச் சாலை அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. திருக்கோயில் நிர்வாகம் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
  • பக்தர்கள் தங்கும் வசதிக்கு ஏற்ப அறைகள், குடில்கள் மற்றும் குளிர்சாதன குடில்கள் கட்டப்பட்டுள்ளது. மேலும் அடிவாரத்திலும், பேருந்து நிலையத்தின் அருகிலும் மற்றும் மலைப்பாதை அருகிலும் ஓய்வறைகள் கட்டப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டில் உள்ளது.
  • திருகோயில் சார்பில் நகரின் முக்கியப் பகுதிகளில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அதற்காக குறைந்த விலையில் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது.
  • பக்தர்களின் பிரார்த்தனையை நிறவேற்றும் பொருட்டு தங்கத்தேர் சேவை நடபெற்று வருகிறது.
  • அபிஷேகம் மற்றும் அர்ச்சனைக்கான பொருட்கள் நியாய விலையில் விற்பதற்காக திருக்கோயில் நிர்வாகம் மூலம் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
  • திருக்கோயில் வெளியீடுகள், நாட்காட்டிகள் விளம்பர பொருட்கள், புத்தகங்கள் விற்பனை செய்ய நிர்வாகம் மூலம் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
  • திருக்கோயில் நிர்வாகம் சார்பில் சிறுவர் மற்றும் சிறுமியர் கருணை இல்லங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதில் ஆதரவற்ற சிறுவர் மற்றும் சிறுமியர் தங்கி படிப்பதற்கும், இலவச உணவு மற்றும் உறைவிட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  • மலைக்கோயிலில் பக்தர்களுக்கு முதலுதவி செய்வதற்கும், அவசர கால நோய் சிகிச்சை செய்வதற்கும், உடல் சம்மந்தமான நோய்கள் தீரவும் பட்டப்படிப்பு படித்த மருத்தவர்கள் மூலம் சித்த மருத்துவமனை நாள்தோறும் செயல்பட்டு வருகிறது.
  • திருத்தணி திருக்கோயிலின் மூலம் நன்கொடையாக வழங்கப்பட்ட நிலத்தில் அரசின் சார்பில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலைக்கல்லுரி செயல்பட்டு வருகிறது.
  • முன்னாள் குடியசுத் தலைவர் டாக்டர். எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்த கட்டிடத்தில் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் நூலகம் செயல்படுத்தப்பட்டு கட்டிடம் பராமரிக்கப்பட்டு வருகிறது
  • நாள்தோறும் சுவாமி தரிசனத்த்ற்கு வருகை தரும் பக்தர்களில் தினசரி நண்பகல் 12.00 மணியளவில் 300 நபர்களுக்கு முழு சாப்பாடுடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு திருக்கோயிலின் இணையதளத்தைப் பார்க்கவும்

புகைப்படத் தொகுப்பு

  • திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலின் தொலை தூர காட்சி
  • திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலின் தொலை தூர காட்சி
  • சரவணபொய்கை, திருத்தணி

அடைவது எப்படி:

வான் வழியாக

சென்னை விமான நிலையம்

தொடர்வண்டி வழியாக

அடிக்கடி இரயில் போக்குவரத்து உள்ளன.

சாலை வழியாக

இங்கு வர அடிக்கடி பேரூந்து வசதி உள்ளன